நீங்களே சொல்லுங்கள்...!
கால் வயித்துக் கஞ்சியில்ல...
காலுக்குச் செருப்புமில்ல...
மானத்த மூடி வைக்க
கிழியாத துணியுமில்ல...
பெத்தபுள்ள நித்தமும்
எம்மூஞ்ச பாத்து நிக்கி
அண்டா குண்டா அடகுவச்சி
எப்படியோ படிக்க வச்சேன்!
மூத்த பொண்ணு சமைஞ்சு நிக்கா
கரை சேர்க்க வழியுமில்ல...
மாப்பிள்ளை வீட்டார்க்கெல்லாம்
மகாராசா பரம்பரைன்னு நெனப்பு!
கவர்மெண்டு மாப்பிள்ளைக்கு
கிலோ கணக்குல் கேட்குறாங்க!
கடைக்கார மாப்பிள்ளைக்கு
கட்டுக்கட்டாக் கேட்குறாங்க!
வேலையில்லா மாப்பிள்ளைக்கு
வேலை வாங்கிக் கொடுங்கன்னு கேட்குறாங்க!
இவங்களுக்குத் தங்கம், பணம்
இதெல்லாம் போதாதாம்...
மோட்டார் வண்டியும் கேட்குறாங்க!
கஞ்சிக்கே வழியில்ல...
காசுக்கு எங்க போக...
எம்பொண்ணு போல பல பொண்ணு
வாழ்க்கையின்றி ஏங்கி நிக்க
வரதட்சணை அரக்கன்தான்
வாழ்க்கையைப் பறிச்சு நிற்கிறான்
வரதட்சணையை ஒழிக்க வேணும்
எல்லாப் பொண்ணும் வாழ வேணும்!
என்ன செய்யலாம்...?
எப்படிச் செய்யலாம்...?
நீங்களே சொல்லுங்கள்...!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.