சீர் வரிசைக்குச் சீர்திருத்தம்
கல்யாணம் காட்சி
கொண்டாடும் கோலம்
வரதட்சணை சீர்செனத்தி
வகைவகையாய் உணவுப்பண்டம்
விருந்து சீர் செய்திட வேண்டுமய்யா...
சீர் வரிசைக்குச் சீர்திருத்தம் வேண்டுமய்யா!
ஒருநாள் கூத்தல்ல
கல்யாணச் சீர்வரிசை
கட்டிக்கொடுத்துக் காலத்திற்கும்
வரிசையாய் விழாக்களென
வகைவகையாய்ச் சீர் செய்து
அழ வேண்டுமய்யா...
சீர் வரிசைக்குச் சீர்திருத்தம் வேண்டுமய்யா!
இருப்பவர் கொட்டிக் கொடுக்கின்றார்
கட்டிக்கொடுத்து மகளுக்கெனச்
செய்கின்றார்களோ இல்லையோ
சமூகத்தில் சுயமதிப்பை
உயர்வாய்க் காட்டிக்கொள்ளவும்
அள்ளி இறைக்கின்றாரய்யா...
சீர் வரிசைக்குச் சீர்திருத்தம் வேண்டுமய்யா!
இல்லாதவர் வாசலிலும்
சுயமதிப்பு தலைகாட்டியே
கடன்வாங்கியும் சீர்செய்து
நிலைதடுமாறி, தடம்மாறியே
குடிகெடுக்கும் சாராயக்கடலில்
கடன்பட்டு மிதக்கின்றார்,
கல்யாணச் சீரால்
மனிதம் சீர் கெடுதேய்யா...
சீர் வரிசைக்குச் சீர்திருத்தம் வேண்டுமய்யா!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.