ஒத்தப் பனை
பனங்காட்டு வீடு
வீட்டுக்கு மேலப் பக்கம்
ஒசந்த ஒத்தப்பனை
பகலுல வீட்டுக்கு
அதுதான் வழி சொல்லும்
ஆனாலும் ராத்திரில
அதுதன் வேல காட்டும்
மேகாத்து நேரத்துல
காஞ்ச ஓல சரசரப்பு
இலேசாப் பயங்காட்டும்
தூக்கத்த அது ஓட்டும்
பெருமாள் அண்ணாச்சி
இடுக்கி பாள சீவி
முட்டி கட்டித்தான்
இறக்கித் தருவாரு
தேனான பதநீரு
பதனிக்குள்ள நுங்கு போட்டு
பக்குவமா குடிச்சதெல்லாம்
மனசவிட்டு மறையாது
நாளும் கடந்து போச்சு
வீடும் மாறிப் போச்சு
இப்பப் போயி பாத்தாக்க
ஒத்தப்பனை மட்டுமில்ல
மத்தப் பனையையும் காணோம்ங்க
கருப்பட்டி தந்த பனை
காளவாசல் போயிருச்சாம்
கண்ணுக்குள்ள நிக்குதுங்க
ஒசந்த ஒத்தப் பனை !
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.