விலக்கப்பட்ட கனி அல்ல!

ஆதாமின் எலும்பில்
தோன்றியவள் அல்ல... ஏவாள்...!
ஆதாமின் ஆக்கத்திற்காய்
தோன்றியவள்... ஏவாள்...!
பாதம் தீண்டும்முள் கடந்து...
பாலைவனம் பல கடந்து... பெண்ணே!
காலம் காலமாய் உன் பயணம்!
கடல் மேல்
மேகம் கொண்ட தாகமாய்...
நூறாண்டு காலமாய்
இன்னும் தீராமல் உன் ஏக்கம்!
ஆலமரமான உன்அறிவின் விலாசம்...
இன்று போன்சாயாக
தொட்டிக்குள் புதைக்கப்பட்டு...
உன் பாதம் தொடா
துறைகள் இல்லை!
ஆனாலும் கண்ணில் படா
கால்விலங்குகள் உன் கால்களில்...
உன் சிறகைச் சிறைப் பிடித்து...
நீ விண்ணைத் தொட்டதாய்...
உனக்குச் சிம்மாசனம்!
நிலவின் ஒளியே!
மேகத்தில் நீங்கி
புது வெளிச்சம் தேடு!
நரம்பில்லா வீணையில்
இசை இல்லை...
உரம் இல்லா வாழ்க்கையில்
உயர்வு இல்லை!
உன் உரத்தை
வேரறுக்க முற்படும்
உள்ளங்களோடு போராடு...!
குன்றின் மேலிட்ட விளக்காய்
சில விளக்குகள்!
குடத்தின் உள்ளிட்ட சூரியனாய்
பல விளக்குகள்!
சின்னச் சின்ன வெற்றிகளில்
சிந்தை நிறையாதே!
மொழியாக... நாடாக... நதியாக...
உன்னைப் பார்த்தது போதும்!
சகமனுஷியாய்ச்
சமத்துவம் தேடும் நிலை நாடு!
கனவு உலகில் ஊர்வலம் முடித்து...
யதார்த்த உலகில் கால்த்தடம் பதி...!
பெண்ணே! நீ
விலக்கப்பட்ட கனி அல்ல...
கோடானுகோடி விதைகள்
உள்ளடங்கிய கனி நீ...!
- முனைவர் பா. பொன்னி, சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.