வாழ்க்கை வட்டம்
சின்ன வயசுல...
எங்க வீட்டு மிதிவண்டியின்
இருக்கைக்குப் புது உறை
கைப்பிடிக்கு நல்ல உறை
பக்கத்துக்கு ஒரு மணி
சக்கரம் ரெண்டுக்கும்
வண்ணவண்ணப் பாசிகள் கோர்த்துப்
பள்ளிக்கூடம் போகும் போது
பொண்ணுங்க பார்க்கும்படி
விடாம மணி அடிச்சி
வேகமாப் போகும் வேளை
முன்சக்கரம் காற்றிறங்கிக்
குப்புற விழுந்தாலும்
மிதிவண்டி ஆசை விட்டதில்லை...!
வயசும் கூடிப் போச்சு
வாழ்க்கை முறையும் மாறிப்போச்சு
மிதிவண்டி, விசையுந்து
மகிழுந்து என்று மாறிப் போச்சு
உழைப்பு குறைஞ்சு போச்சு
உடம்பும் கூடிப் போச்சு
மருத்துவரைப் பார்க்கப் போனா,
மிதிவண்டி மிதிக்கச் சொல்றாரு...
வாழ்க்கையொரு வட்டமுன்னு
இப்போத்தான் புரிஞ்சுக்கிட்டேன்
மீண்டும் மிதிவண்டி
மிதிக்கத் தயாராயிட்டேன்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.