அன்னை அவளே என்று...!
ஈரைந்து மாதம்
கருவறை வாசம்
கலங்காமல் ஏற்றாள்
சுகமான சுமையாய்
சுமையை இறக்கித்
தாயாகி மகிழ்ந்தாள்
மழலை காளையாய் வாழ்ந்து
மனிதனாய் மாறக் காரணம்
யாரெனச் சொல்வேன்
அன்னை அவளே என்று...!
பள்ளியின் வாசம்
துளியும் இல்லாமல்
ஆனாலும் என்னை
அறிவாய் வளர்த்தாள்
எனக்காகத் தன்னைத்
தரைமட்டும் தாழ்த்தினாள்
அறிவால் இன்று நான்
விண்மட்டும் உயரக் காரணம்
யாரெனச் சொல்வேன்
அன்னை அவளே என்று...!
தந்தையாய்ப் பாசம்
தாரமாய் நேசம்
உறவாய் மகிழ்ச்சி
உடன்பிறப்பாய் நெகிழ்ச்சி
நண்பனாய் இன்பம்
அத்தனையும் ஒன்றாய்த்
தருவது யாரென
உரக்கச் சொல்வேன்
பெண்ணின் பெருமை
அன்னை அவளே என்று...!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.