அக்கினிக்குஞ்சே மீண்டும்...!

பாரதி
என் இதய வீணையின்
ராகங்களில்
பலவற்றுக்குச் சொந்தக்காரன்.
வார்த்தைகள் அவன்
வாசலில் தவமிருக்கும்
அவன்
அழைப்பதன் முன்னே
வரிசையில் வரக் காத்திருக்கும்
அவனது
நிமிர்ந்த முகத்தை
நிலம் கண்டதில்லை.
அச்சம் என்ற சொல்லை
அவன்
அகராதி கொண்டதில்லை.
தன்
இதய நாற்றுகளைப் பறித்து
மக்கள் மனதில்
நட்டவன் அவன்
விளைச்சல் ஏராளம்
அவன் பட்ட துன்பங்களோ
தாராளம்
கலைமகள் அவன்
நாவில் குடி கொண்டாள்
அலைமகளோ அவனோடு
என்றும் பகை கொண்டாள்
பொருளை ஒரு
பொருட்டாக மதியாதவன்
பொருளான வாழ்வின்
பொருள் ஆனான்
கவிதை வாசலே
அவன் அறிமுகம்
ஆனாலும் அவன்
படைப்புச் சாளரங்கள் ஆயிரம்
சீர்கேட்டினையும்
சித்திரமாய்ப் படமாக்கிய
அவன் கேலிச்சித்திரங்கள்
சமூகத்தின்
சாட்டையடியான
அவன் சிறுகதைகள்
உண்மைகளை
உரக்கச் சொல்லிய
அவன் கட்டுரைகள்
அவன் சாளரங்களின்
வழியே நாம்
கண்டுணரும் சரித்திரம்
இந்திய சரித்திரம்
வீடே உலகாய்
வாழ்பவர் மத்தியில்
உலகையே வீடாய்க் கண்டவன்
சுயநலம் போட்டியிடும்
இருள் உலகில்
பொதுநல விளக்காய்
சுடர் விட்டவன்
அவன்
கவிதையின் வாள்வீச்சில்
தகர்த்தெறிந்த தளைகள் பல
தளைகள்
நீங்கிய போதும்
இன்று நாம்
கட்டிக் கொள்ளும் தளைகள் பல
வெளிச்சத்தில் வந்த போதும்
இருட்டிற்குள் நம் பாதை
வானத்தை அளந்த போதும்
வட்டத்திற்குள் நம் பார்வை
அக்னிக் குஞ்சே மீண்டும்
ஒருமுறை பிறந்து வா
உலகை வெல்ல அல்ல
வாழ்வின் உன்னதம் சொல்ல
- முனைவர் பா. பொன்னி, சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.