மாற்ற வாருங்கள்...!
கண்ணில் காணுமுன்னே
கள்ளிப்பாலும்
கவள நெல்லும்
காலனாய்ப் பார்த்து,
பப்பாளிப் பழத்துக்கும்
பலவகை மாத்திரைக்கும்
தப்பிப்
பாரில் வந்து பிறந்தவள்...
அடுப்படியில் முடக்கிவைத்துப்
படிக்க வைக்க மனமின்றி,
பாடாய்ப் பலபட்டு
பலவேலை செய்து வளர்ந்தவள்...
பருவத்தின் வாசலிலே
பார்க்கும் ஓநாய்களுக்கு
ஓடி ஒளிந்து,
வேலையிடங்களிலே
வேறுபட்ட பார்வைகளின்
வேதனையில் விழுந்தவள்...
காதலெனும் மாயவலை
வீழ்ந்து,
பெண்பார்க்கும் படலமெனும்
ஒப்பனைகள்
பலமுறை கலைத்து,
மணமேடையை எட்டி
வரதட்சணை வேலியில்
வாடி விழுந்தவள்...
இல்லறத்து இடர்பாடுகள்,
நேற்றைய மணமகள்களின்
நாட்டாண்மைகள்-
வெடிக்கும் ஸ்டவ்களாய்
வேறு பலவாய்ப் பார்த்தவள்...
பல்கலைக்கழகங்கள் தராத
பட்டங்கள் பல பெற்று,
பிள்ளைகள் பெற்ற பின்னும்
பல துயரைக் கடந்தவள்...
வயது முதிர்ந்த பின்னே
முதியோர் இல்ல
வழிபார்த்து நிற்பவள்...
இப்படித்தான் இருக்குது
இவளுக்கு
இன்றும் வெளியுலகம்...
இதை மாற்ற வாருங்கள்
இதற்காய் ஒன்று சேருங்கள்
இனிய உலகைப் பாருங்கள்...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.