அதிக தூரத்திலில்லை...!
ஊனமுள்ள உள்ளத்தோடு
போரிட்டு நீ
பழுது படாதே...!
உண்மையும் வெண்மையும்
உன் வசமிருப்பின்
உடைந்து போகாதே...!
மாற்றான் இழி சொல்
செயல் கண்டு
உருகி விடாதே...!
மொத்தம் உன்
சித்தம் அறியும்
அதை நிரூபிக்க
முயற்சிக்காதே...!
கொடியோர் குறை
காதில் வாங்காதே...!
மடையோர் கதை
செவியிலேற்றாதே...!
உன் மாண்பு
உனையன்றி அறிவாரில்லை
அதை அறிந்தோர் முன்
மட்டும் நீ சிறந்து
விளங்குவாய்...!
அன்பிற்கு முன்
அடிமையாகு
உன் பண்பினால்
காட்சி பிழைக்காது...!
யதார்த்தங்களோடு
மோதிக் கொள்...
போலிகளை விட்டொழி
உனைப் போற்றுதற்குரிய
நாட்களைக் கணக்கிடு...!
தடைக்கற்களை வெற்றியின்
படிக்கட்டுகளாய் நினை
தரணியெங்கும் உன்
புகழ் பரப்பப் போராடு...!
விடாப்பிடியாய்
வெற்றியைத் துரத்து
உன் விடியல் ஒன்றும்
அதிக தூரத்திலில்லை...!
- சஹீகா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.