பதறிப் போகின்றனர்...!
முல்லை மலரொன்று
மல்லாக்க படுத்திங்கு
சொப்பனம் காணுதோ...!
ஆசைக்குத் தென்றலும்
அவஸ்தைக்கு நீயும்
தொட்டுக் கொண்டதில்
பனி விழும் புல் நுனிகள்
துளிர்த்துக் கொண்டதோ...!
மதி முகம் காட்டி
உடலினை மறைத்த நீயும்
கடற் கன்னியோ
வேகும் வெந்தனலில்
வெயிற் காயும் நீயொரு
வஞ்சிக் கொடியோ...!
வண்டுகளும் தேனீக்களும்
வண்ணாத்துப் பூச்சியுடன்
பேசிய ரகசியத்தின்
கருப்பொருளும் நீயோ...!
செவ்விதழ் மலர
பூவை உனைக் கண்ட வண்டு
தேன் சிந்தும் புஷ்பமென
ஏமாற்றங் கொண்டதோ... !
பஞ்சு மேகப் பொதியொன்று
படுத்துறங்குது இங்கென்று
வெண்ணிலவும் வந்து கொண்டிருக்கிறது - உன்
மடி மீதினில் துயில் கொள்ள...!
தேவதை ஒன்று
தவறி விழுந்திங்கு
வியர்த்துப் போகிறதென்று
பாவம் பதறிப் போகின்றனர்
பருவ மலரான ஆண்கள்...!
- சஹீகா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.