தேர்தல் வருகுதய்யா...!

தேர்தல் வருகுதய்யா... ... இங்கே
தேர்தல் வருகுதய்யா...!
பார்வையில் படாத ஆட்களெலாம்... மிகப்
பணிவாய்க் குனிந்து, கைகளைக் கூப்பி
ஆர்வமுடன் நம் வாக்குகள் கேட்பார்... அவர்
அளித்த வாக்குறுதி மறந்து போவார்...!
தேர்தலில் வாக்குகள் போடும் வரை... நாம்
தினமும் அவரது ஆண்டைகளே...!
தேர்தலில் வெற்றி பெற்றதுமே... நாம்
திரும்பவும் ஆவோம் அடிமைகளாய்...!
தேர்தல் வருகுதய்யா... இங்கே
தேர்தல் வருகுதய்யா...!
கனவிலும் கூட இலவசம் வேண்டாம்... சில
காசு பணங்களின் கவர்களும் வேண்டாம்...!
உணர்வுடனே நம் உரிமையென்றறிந்தே... அந்த
உயர்வுடனே வாக்குரிமையை அளிப்போம்...!
மனதிலும், நினைவிலும் நல்லதை நினைக்கும்
மனசாட்சி கொண்டோரைத் தேர்ந்தெடுப்போம்...!
அனுதினம் மக்களுக்கு உழைப்போரையே... நல்ல
ஆட்சி மன்றத்தில் அமர்த்திடுவோம்...!
தேர்தல் வருகுதய்யா... இங்கே
தேர்தல் வருகுதய்யா...!
தேர்தல் நாளில் ஓய்வு கொள்ளாமல் ... நம்
திறன்மிகு வாக்குகள் தவறாதளிப்போம்...!
சீர்மிக்க அரசைத் தேர்ந்தெடுப்போம்... நம்
செயல்திறன் எதுவெனக் காட்டிடுவோம்...!
பார்வையில் படுகின்ற குற்றங்களை... எந்தப்
பயமுமின்றிச் சரியாய் நேர் செய்வோம்...!
வார்த்தையினாலல்ல, செய்கையினாலே... நம்
வழியினில் தேர்தலைஂ ஆயுதமாக்கிடுவோம்...!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.