வாக்கு தவறாத நாக்கு

உயிர்களுக்கு எலும்பில்லா ஈர நாக்கு
உண்டென்ற உண்மையையே அறிவோம் நாமே
பயிலுகின்ற மக்களெல்லாம் நாவசைத்தே
பாங்குடனே சொல்லெடுத்து பேசிடுவார்
வையிரேற்றி சிரிப்பதற்கும் வாக்கு உண்டு
வந்ததெல்லாம் சொல்வதற்கும் நாக்கு உண்டு
ஆயிரமாய்ச் இருந்தாலும் சொற்கள், தங்கும்
ஆணவத்தில் பிறக்கின்ற சொற்கள் கற்கள்
எண்ணத்தை உணர்வதனை வெளியல் சொல்ல
எழுகின்ற ஒலிவடிவே வாக்கு! சொற்கள்
பண்பதனைப் பெற்றுவிடும் இடத்திற்கேற்ப
பகுத்தறிந்தால் சொற்களிலே குற்றம் இல்லை
எண்ணத்தின் வெளிப்பாடாய் நன்மை தீமை
என்றும் நம் சொற்களிலே தோற்றம் காணும்
மண்ணுலகில் கனியவைக்கும் பேச்சு! நல்ல
மனித நேயம் வளர்த்துவிடும்! உயிரின் மூச்சு!
உண்மையென்றும் பொய்யென்றும் சொல்லில் இல்லை
உரைத்தலைநீ மறைத்தாலோ பொய்யே என்பார்
தண்ணீரில் மிதக்கும்நா வளைந்து நீண்டு
தன்போக்கில் அதிர்வடைந்தே எழுப்பும் ஓசை
விண்ணோக்கி கோளிருக்கும் இடமே பார்த்து
வியந்துசொல்வார் ஜோதிடம்தான் ! வாக்கு சுத்தம்
கொண்டதனால் சொன்னசொல்லே பலிக்கும் என்பார்!!
கொள்கை பல அறிவிக்கும் அரசு என்றும்
வாய்மையே வெல்லு மென்றுதன் முதன்மை நோக்கம்
வாய்த்தோர்க்கு வகையாக உரைத்தல் பாரீர்!!
மெய்யென்றே சொல்லிவிட்டே பொய்யைச் சொல்லும்
மெய்யன்பர் நாட்டினிலே உள்ளதாலே
பாய் போட்டு படுக்க வேண்டும் வாக்கு நாக்கில்
பாழுமுயிர் போகையிலும் உண்மை சொல்லி
சாய்ந்திடுவோம்! வாக்குமாறா நாக்கதற்கு
சாகாநல் வரமுண்டு சொல்வோம்! வெல்வோம்!!
- சி. அருள் ஜோசப் ராஜ், கடலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.