வாராறய்யா வேட்பாளரு...
வாராறய்யா வேட்பாளர்
வளஞ்சி நெளிஞ்சி வாராரு.
தாராறய்யா வாக்குறுதி
தாராளமாத் தாராரு.
வீடுவீடா நுழயறாரு
விருந்தினராப் புழங்கறாரு
ஏடுஏடா எழுதிவச்சி
எழுதினதப் படிக்கிறாரு.
வாக்களிக்க வேணுமின்னு
வாக்காளரப் பாக்கிறாரு
நோக்கமாப் போடணுமுன்னு
நூறுவாட்டிக் கேக்கறாரு
ஏகமாகப் பேசிப்பேசி
எம்எல்ஏ வாக்கச்சொல்லி
வேகமாகக் கேக்கறாரு
விருப்பமாகப் பாக்கறாரு.
யாருவேணா வரட்டுங்க
ஆதரவு கேக்கட்டுங்க
ஓரஞ்சாரம் போகாம
ஒத்தரூபா வாங்காம
நேரத்தோட போயிநின்னு
நியாயத்தோட வாக்களிங்க
சோரம்போக வேணாங்க
சொந்தபுத்தி வேணுங்க.
ஆயிரந்தான் சொல்வாங்க
ஆயிரமா நீட்டுவாங்க
பாயிரமாப் பாடுவாங்க
பகட்டில் நீங்க மாட்டாம
சாய்ந்திடாம நேர்மையோடு
சரியான ஆளத் தேர்ந்தெடுங்க
வாய்த்தவாய்ப்ப பயன்படுத்தி
வாக்களிக்க வேணுமிங்க!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.