சாதனை விருட்சமாகி...
வாலிபச் சிறகு முளைத்தும்
பறக்கத் தெரியாத குஞ்சென
இயலாமையில் முடக்கமேன்...
அதோ விரிந்த வானம்
லட்சிய எண்ணங்களின்
நெம்புதலில் எழும்பு
காத்திருக்கிறது சிகரம்...
முடியாமைச் சூறாவளி
திசையெங்கும் சுழலும்
நம்பிக்கைத் தென்றலைச் சுவாசி...
சோம்பலை எதிரியாக்கிச்
சுறுசுறுப்பை நண்பனாக்கி
உயர்ந்த அடையாளம் காட்டு...
உனக்கான பயணத்தில்
கனவுகள் துணையாகாது
நிஜத்தின் முடிவில்தான்
வாழ்வின் முகவரி தெரியும்...
நீயொரு விதையென்று உணர்
சாராசரியாகி மக்கி விடாதே
சாதனை விருட்சமாகி
நிகழ்காலத்தில் நிமிர்ந்து நில்...!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.