காதல் போதை!!
காதலில் விழுந்து பார் -
செவ்வான நட்சத்திரங்களும்
பல வண்ணப் பூத்தூவி பகலிலும்
பியோனோ வாசித்திடும்...
நெஞ்சுக்கூட்டில்
பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறந்திடும்...
காதலைக் காதலித்துப் பார் -
கால்கள் தரையில் படாமல்
காலம் நேரம் மறந்து
காற்றில் பறக்கத் தோன்றிடும்...
கவிதையெழுதத் தூண்டிடும்...
கண்ணீர்த் துளியும்
அமிர்தமாய் மாறிடும்...
காதலை எண்ணிப்பார் -
மூச்சுக் காற்றுக்கும்
மோட்சம் கிட்டும்....
பேச்சில் இங்கிதம்
தானே வந்து முட்டும்...
காணும் ஸ்வப்னத்திலும்
காதல் ரசம் சொட்டும்...
காதலைச் சுவாசித்துப் பார் -
கருங்குயிலும்
வண்ணம் மாறி
பிரேம கானம் பாடிடும்...
கார் மேகமும்
தேனை மழையினைப்
பொழிந்திடும்...
தேவதைகளின் மொழியும்
எளிதில் புரிந்திடும்...
காதலைக் கண்ணடித்துப் பார் -
கடைக்கண் பார்வையும்
சாமரம் வீசிடும்...
ஊமையின் உதடுகளும்
உணர்வுப் பூர்வமாய்ப்
பேசிடும்...
கண்ணாடியும் கலர் கலராய்
பிம்பத்தைப் பிரதிபலித்திடும்.
காதலை உணர்ந்து பார் -
தினமும் காதலர்
தினமாய்த் தோன்றிடும்...
காற்றும் மேனியை
கவித்துவமாய் தழுவிடும்...
பாதிரிகளைப் பரமாத்மர்களாய்
தொழுதிடத் தூண்டிடும்...
- முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.