வெல்லுந் தமிழ் வெண்பா
அழகுமொழி அன்புமொழி ஆன்றோர்கள் போற்றிப்
பழகுமொழி பண்புமொழி பாரின்... உலகமொழி
சொல்லும் பொருளும் சுவையாய் இணைந்தமொழி
வெல்லுந் தமிழை விளம்பு!
முன்னோர் மொழிபேசும் மூத்த மொழியெனவே
இன்னும் பெயர்தாங்கும் இன்பமொழி... கன்னிமொழி
மெள்ள வளர்கின்ற மேன்மைமிகு அன்னைமொழி
வெல்லுந் தமிழை விளம்பு!
இயலிசையாய் நாடகமாய் எத்தனையோ நூல்கள்
மயங்கவைக்கும் செம்மொழியாய் மக்கள்... பயன்கொண்டு
சொல்லின் இலக்கணமாய் சொக்கும் இலக்கியமாய்
வெல்லுந் தமிழை விளம்பு!
நல்லோர்கள் பேசுமொழி நாடறிந்த தாய்மொழியின்
வல்லமையால் வாழுமொழி நம்மொழியாம்... செல்வமொழி
உள்ள உலகங்கள் உள்ளவரை பேரெடுக்கும்
வெல்லுந் தமிழை விளம்பு!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.