கொடுத்து வச்சவங்க...!
வாய்க்கால் வரப்போரம்
வளமான தோப்போரம்
நெற்றி வேர்வை நிலத்தில் விழ
உழைத்துக் களைத்த பின்னே
பழைய சோற்றோடு
சுட்டு வச்ச கருவாடு
வயிறு நிறையச் சாப்பிட்டோம்
மரத்தடியில் தூங்கினோம்
நோய் எதுவும் வந்ததில்லை
வசதியில்லாக் கிராமத்து வாழ்க்கையில் !
நாகரீகம் பெருகிப் போச்சு
நகரப் பக்கம் வந்தாச்சு
உடலுழைப்பு இங்கு இல்லை
வியர்வை வெளியேற வழியுமில்லை
வேளைக்கு ஒரு சோறு
விதவிதமாய்க் காய்கறிகளோடு
மூன்று நேரம் சாப்பிட்டாலும்
தூக்கம் வர வழியில்லை
இரத்த அழுத்தம் கூடிப்போச்சு
சர்க்கரையும் வந்து சேர்ந்தாச்சு !
பஞ்சு மெத்தை இருந்தும்
கொஞ்சமும் தூக்கமில்லை
நரகமாச்சு நகர வாழ்க்கை
நகரத்தை விட்டுத்தான்
கிராமம் போக ஆசைதான்
வசதிய அனுபவிச்ச பின்
கிராமம் போக முடியாமல்
பாழும் மனம் தவிக்குதுங்க
கிராமத்தில் வாழ்வோரே
கொடுத்து வச்சவங்க நீங்க...!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.