மண் வாசனை
மனிதா நீ மண்ணாக இருப்பவன்தான்
மண்ணுக்கேத் திரும்புகிறாய் ! மனிதன் மண்ணில்
தனியாக இருப்பதில்லை சேர்ந்தே வாழ
தணியாத தாகம் தான் அவனே கொண்டான்
இனிமையாக வாழ்வதற்கே இயற்கை தந்தான்
இதிலேதான் மரம் விலங்கு பறவை என்று
மனிதனுக்கே மகிழ்வுகூட்ட வகைகள் வைத்தான்
மதியாலே அவன் வாழ உரிமை தந்தான்
மண்மீது பிறக்கின்ற உயிர்களுக்கே
மண்ணகத்தில் சுரக்கின்ற வாசனைகள்
தண்ணீர்போல் உடலகத்தில் புகுந்து நிற்கும்
தனித்தனியே உயரினங்கள் வாசம் பெற்று
விண்ணகத்துக் காற்றைத்தான் சுவாசம் கொள்ளும்
விடியலொன்று வந்தாலே மண்ணில் வாசம்
விண்துளிகள் தரைபட்டால் வேற்று வாசம்
விதவிதமாய் வாசனைகள் மண்ணில் உண்டு
ஆனாலும் மனிதனுக்கோ மாற்று வாசம்
ஆசையன்பு கருணையாலே ஒற்றை வாசம்
வீணான கோபத்தால் பகைமை வாசம்
வீழ்த்துகின்ற கொலைவெறியால் இரத்த வாசம்
பேணாத அன்பாலே வெறுப்பு வீசும்
பேதமைகள் வந்தாலே நெருப்பு வாசம்
கனாக்கண்ட பலராலே புதுமை வாசம்
கண்ணெதிரில் மாறிப்போ னதேமண் வாசம்
- சி. அருள் ஜோசப் ராஜ், கடலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.