கவிஞனுக்கு... வேண்டுகோள்!
கவிஞனே
மாடியில் வசித்துக் கொண்டு
குடிசையைப் பற்றி எழுதாதே...
பசியாற உண்டு கழித்தபின்
வறுமையின் கொடிது
என்றுஎழுதாதே...
ஆழ்ந்த உறக்கம் கலைந்து
விழிப்புணர்வில்
எழவேண்டி எழுதாதே...
நாளுக்கொரு உடையணிந்து
ஏழ்மைக் கந்தலை
வறுமையுடன் எழுதாதே...
பைநிறைய பணம் வைத்துப்
பிச்சைக்காரனின் கையேந்தல்
கெஞ்சலை வருந்தி எழுதாதே...
வீட்டுக்குள் பக்தியைப் பதுக்கி
பகுத்தறிவு வேண்டும்
புதிதாய் எழுதாதே...
நேரம் கடந்து வீடு வந்த
மகளைக் கண்டித்துக் கொண்டு
பெண்ணுரிமை வேண்டுமென எழுதாதே...
சொத்துக்காக உடன் பிறந்த
சகோதரன் மீது வழக்கிட்டு
ஒற்றுமையோடிரு உபதேசம் எழுதாதே...
அந்நிய மது மயக்கத்தில்
கள்ளச்சாராயச் சாவுக்குக் கண்ணீர் வடித்து
கவிதாஞ்சலி எழுதாதே...
சாதி பார்த்து பெண் முடித்து
சாதியில் பெண் கொடுத்து எடுத்து
சமத்துவ சமூகமென எழுதாதே...
இன்றைய நிஜங்களை மறந்து
நாளைய கற்பனைகளைப்
பெருமையாய் எழுதாதே...
நேர்மையுடன் தராசு முள்ளாயிருந்து
உண்மைகளை உணர்த்தி
உள்ளத்திலிருப்பதை அப்படியே
எழுதிடு...!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.