சுத்தம் செய்வோம்!
பாரத நாடு பழம்பெரும் நாடு
பழம்பெருமை காக்க நேர்மையை நாடு
மாம்பழத்து வண்டாய் மறைந்தே தாக்கும்
ஊழல் மலிந்தால் நலியும் நாடும்
திட்டம் தீட்டினார் கோடியில் அங்கே
துளியாய்ச் சேர்ந்தது மக்களின் கையில்
பயிருக்குப் பாயும் தண்ணீர் எல்லாம்
பாதையெங்கும் கசிந்தே போனால்
நீரின்றி செடியும் நிச்சயம் வாடும்
நலத்திட்ட நிதியும் பல கை மாறி
பயணிக்கும் நீராய் கசிந்தே போனால்
மக்கள் திட்டம் என்னவாகும்?
ஏட்டில் மட்டுமே திட்டம் இருக்கும்
நாட்டின் வளர்ச்சி குறைந்தே போகும்
புற்றுநோய் பரவிய உடலின் பாகத்தை
வெட்டியே எறிந்தால் நீண்டநாள் வாழலாம்
கறைபட்ட துணியை அடித்துத் துவைத்தால்
பளிச்சென நாமும் அணிந்தே மகிழலாம்
புற்று நோயாய் நாட்டில் ஊழல்
அடியோடு அகற்றுவோம் ஊழல்வாதிகளை
அரசியல் சாக்கடை என்றே சொல்லி
எட்ட நின்று வேடிக்கை பார்க்காமல்
அதில் இறங்கிச் சுத்தம் செய்திடுவோம்
ஊழலற்ற தூய்மை இந்தியா படைத்திடுவோம்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.