சமஞ்சா அடங்காதா?
இந்தக் காட்டுமாட்டுப் பயகிட்ட
கருமாயப்படுறதுக்கு- நாந்
தீயப் பொருத்திக்கிட்டா செத்த சொகமாயிருக்கும்.
என்னப் பெத்த சனம் பீதின்னிபய சனம்
இந்தத் துரியோதனங் கையில விட்டு;
தலமுழுகுன கெட்ட சனம்
ஒரு மொழக் கயித்துக்கும் வழியில்ல
உசிரு வாழவும் ஒணர்ச்சியில்லை.
கங்கணம் கட்டிக்கிட்டு- எங்
கொலையக் கொதிக்கவிட்டு
மூதேவி முண்ட என்ன
உசிரோட அடிக்கையில
நாம் பெத்த ராசாத்தி இந்த
ஒத்தப் பொட்ட சமஞ்சா
என் நெத்தம் கடவாயில ஒழுக
பயமுறுத்தும் இந்தச் சனம்
பதமா மாறாதா - மனுசத்
திமிறுதேன் அடங்காதா?
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.