யாரோ போல...
கும்பகோணத்துக் குழந்தைகள் மீது
மேற்கூரை எரிந்து விழுகையில்
நான் சுடச்சுட தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்
தர்மபுரி பேருந்தில்
எரிக்கப்பட்ட மாணவிகளின்
அலறலின்போது நான்
சுசீலாக் குரலில் மெய்மறந்திருந்தேன்.
ஏர்வாடி மனநிலை பிறழ்ந்தவர்கள் தீயில் சிக்கி
கால்சங்கிலிகளை உதறத்
துடித்தபோது நான்
பயணம் செய்துகொண்டிருந்தேன்.
சுனாமியின் விநாடிகளில்
தானேயின் பொழுதில்
கதை பேசிக் கொண்டிருந்தேன்.
லட்சக் கணக்கில் ஆண்களும்
நிலமும் பெண்களும்
சிதைக்கப்பட்ட போது
பேச்சுவார்த்தை என்ற பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஜிகினாக் காகிதம் கட்டி
மலைப்பாம்புகளை முகத்தில் போடும்
உலக மயத்து நாளில்
என் மண்ணில் எழுவது
விடியலா?
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.