இழப்பு...!
இருக்கும் ஒன்று இல்லாமல் போனால்
இயம்புவோம் அதனை இழப்பு என்று
இழப்பை எல்லாம் ஒன்றெனக் கொண்டால்
ஒவ்வாத வாழ்க்கை நெறியாகும் உலகில்
சில இழப்புகள் துன்பம் தரும்
பல இழப்புகள் நன்மையாய் அமையும்.
உறவுகள் இழப்பு உழல வைக்கும்
பணத்தின் இழப்பு பதற வைக்கும்
நண்பனின் இழப்பு தனிமையைத் தரும்
சேர்த்த புகழை இழப்போமானால்
உயிர் இருந்தும் பிணமாய் வாழ வைக்கும்
இப்படி இழப்பின் பாதிப்பு அதிகம்!
கூடா நட்பை இழந்தால் நன்மை
கர்வம் இழந்தால் கூடும் பெருமை
நானென்ற அகந்தையை முற்றிலும் இழந்து
ஊரோடு ஒத்து வாழ்வது சிறப்பு
கற்றுக் கொள்ள வேண்டும் என்றால்
முடியாது என்ற எண்ணம் இழக்க வேண்டும்!
தண்ணீர் இறைத்த கிணறு சுரக்கும்
வெற்றிடம் ஓடி காற்றும் சேரும்
தேவையற்றதை இழப்போமானால்
தேவையானது வந்து நிரம்பும்
பூரண வாழ்க்கை வாழ்ந்து ஜெயிக்க
இழப்பைத் தாங்கும் மனநிலை வேண்டும்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.