ஹைக்கூ... ஹைக்கூ...
அப்பா வைவார்
அனிச்சையாய் நீளுமென் கை
கூரைவழி வடியும் மழைநீர்!
*****
விழுந்த பனைமட்டை
நெடுநேரம் சத்தமிட்டபடி
பயந்த அணில்!
*****
சாப்பிட்ட தட்டு
கழுவிக் கொண்டிருக்கிறாள்
பசியுடன் வேலைக்காரி!
*****
வைக்கோல் போர்
சரிய சரிய ஏறி விளையாடும்
ஆட்டுக் குட்டிகள்!
*****
காவல் தெய்வம்
விழிகள் வெறித்தபடி
பலியாட்டின் தலை!
*****
குறுக்கே நடக்க நடக்க
நேரானது பாதை...
அறுவடை முடிந்த வயல்!
*****
அணைந்த அடுப்பு
எரிந்து கொண்டிருக்கிறது
பசியால் ஏழையின் வயிறு!
*****
திரும்பி நடக்கிறான்
பூப்பறிக்க வந்தவன்...
தேனருந்தும் பட்டாம்பூச்சி!
- மகிழ்நன், மறைக்காடு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.