பெண்ணே அரசியல் பணி கொள்!!
கைகளை வீசிச் செல்லும் பெண்ணே
கால்கள் புதிய தடம்பதிய வீசிச்செல்!
கண்களை அங்குமிங்கும் துரத்தலில் விட்டுக்
காலம் உனது பின்னால் வரும்படிச் செய்!
கன்னியின் மேனியினை மோகம் கொண்டு
கற்பினைச் சூறையாடும் கயவரைத் தீயிலிடு!
கண்களால் அன்பினை காட்டித்தம் மக்களைக்
கல்வியால் அறிவொளி பெற்றிடச் செய்!
அரசியல் எதற்கென்று நீபுறந் தள்ளாதே
அதிகார மின்மையால் நம்மை மற்றோர்
அடிமைக் கூட்டங்களென ஆட்டி வைக்கின்றனர்
அறிவாய் உண்மை உலகினைப் பெண்ணே!
அரசியல் உலகினில் பெண்களால் எட்டாதவை
அவையிவை இல்லையென கொடியை நாட்டு!
அரசியல் வாழ்வினில் பெண்களின் பங்கு
ஆண்களுக்குச் சமமென கைகள்நீட்டி முழங்கு!
பொருளாதார அரசியலை அறிந்து நம்வீட்டுப்
பொருளாதார அரசியல் நிலையை எண்ணிடு!
பொதுவாய் எல்லாம் கிடைக்கிற காலம்
பொதுவுடைமைக் கொள்கை இங்கே உண்டு!
பொதுவுடமை யுணர்வுகள் நாட்டு மக்களிடத்தில்
பொங்கியெழ பெண்ணே அரசியல்பணி கொள்!
பொதுவுடைமைக் கோட்பாடு அறிவில் விளங்கி
பொதுசிந்தை யுடனேநீ நிமிர்நடை போடு!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.