உறங்கா விடியல்...
முருக மலையைத்
தகர்க்க வந்த கிளி ஒன்று
மலைதொட்ட சூரியனை
மேற்கில் சாய்த்துவிட்ட
களைப்பில் உறங்குகிறது.
ஆந்தையின் விழிகளில்
மின்மினிகள் கூடு சேர்கின்றன.
இரவின் கூடலில் இடியெனச் சிரித்த
நிலவின் பற்கள் சிதறிய வானில்
மனதின் செயற்கைக் கோள்
மௌனித்துக் கிடக்கிறது.
மறைந்தாடும் நிலவுடன்
உறங்காத விழிகள் விளையாட
சப்தமின்றிச் சிறகு விரிந்து
வைகறையைக் கோர்க்கிறது.
நெஞ்சின் வெள்ளக்காட்டில்
வைரங்களாய் நீந்துகின்றன
வாழ்நாட்கள்
பொன்மீனாய்த் துள்ளி நீந்தும்
வார்த்தைகளை ஏந்தியழைக்கிறது
வெள்ளக்காடு.
குருதியில் குதிக்கும் கோழிகளுக்கு
வார்த்தைகளே
சகலமுமாகின்றன.
திருடன் புகுந்த வீட்டில்
மிஞ்சும் பெருக்குமாறாக
மிஞ்சுகின்றன ஞாபகங்கள்.
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.