மொட்டு விட்ட காதல்
கடல் மேல் எழுந்த மின்னல் போல் -அவள்
கண்ணொளி பாய்ச்சிவிட்டாள்
காதலில் விழுந்துவிட்டேன் -வேறு
காரியங்கள் ஓடவில்லை
கன்னி மனதில் இடம் பிடிக்கக்
கண்கள் நித்திரை கொள்ளவில்லை
பல யோசனை செய்து வந்தேன்
கட்டிக் கரும்புச்சுவை கவிதை வரைந்து
அவளிடம் காணிக்கை என்றேன்
மெத்த ஒருபார்வை எனைப் பார்த்து
கவிதை ‘எனக்கா’ என்றாள்
மேனியில் மின்சாரம் பாய்ந்தவன் போல்
வாய் குளறி "ஆம்" என்றேன்
மனதில் சிலவரி படித்து மறுபார்வை
எனைப் பார்த்தாள் - அந்த காந்தப் பார்வையிலே
அவள் ஆவி தழுவிவிட்டேன்
மாதுளை வாய்திறந்து ஓர் வார்த்தை
மீண்டும் கலப்போம் என்றாள்!
சிந்தை பித்தேறியதனால் எங்கே! எப்போது
என்று வினவ மறந்து விட்டேன்...
நாள்தோறும் காத்திருந்து அவள்
நிழல் மட்டும் பார்த்திருந்தேன்
நிஜரூபம் வரவில்லை - நிம்மதி
இழந்து விட்டேன்.
அவள் மேல் உள்ள காதலைக் காவியமாக்கிக்
கற்பனையில் கலந்திருந்தேன்
காரிகை தரிசனம் மீண்டும் கிடைக்கும் வரை
கவிதைகள் கோர்த்திருந்தேன்
இங்கிவள் நினைவில்
உடலும் சோர்ந்து விட்டேன்
உணவும் மறந்து விட்டேன்
அவளைக் கனவில் வரவழைத்துக் காதல் பேசினேன்
காதோரம் காதலைச் சொல்லி இலக்கியம் படைத்துவிட்டேன்!
கண்கள் இமை திறந்ததும் காட்சிகள் ஏதுமில்லை
பெரும் கவலையைச் சுமந்து கொண்டேன்
பெண்ணே, கண்ணே, பொன்னொளியே
கனவின் வியனுருவே உனைக் காண்பேனோ
கானல் நீர் ஆவேனோ, என் ஏக்கம் தீர்ப்பாளோ
என்று பசுமையாய் அவள் நினைவை மனதில் தேக்கி வைத்தேன்!
காதலும் மாறவில்லை பல
காலங்கள் கடத்தி விட்டேன் - ஓர்தினம்
இயற்கையுடன் பேசச் சோலைக்குச் சென்றேன்
அங்கு பாடும் குயிலும்
பூவை மொய்க்கும் வண்டுகள் போல்
சிறுவர் கூட்டமும், காதலர் கூட்டமுமாக இருந்தன
ஆங்கொரு ஏந்திழையாள் கையில் குழந்தையுடன்
மழலையாடக் கண்டேன்!
மின்வெட்டு, கண்வெட்டு பொன்வெட்டு எல்லாம்
என் காதலியை ஒத்திருக்கக் கண்துடைத்து
மீண்டும் பார்த்தேன்! பார்த்தேன்! பார்த்தேன்
பார்ப்பேனோ என்றிருந்தவளை பார்த்தேன்
அவள் துணைவனுடனும் மழலையுடனும் பார்த்தேன்
நின்ற இடத்தில் சுழன்றது இவ்வுலகம் நிலைதடுமாறினேன்
என் இதயத்தை இழுத்து வைத்து அறுத்தாற்போன்று
உணர்வுகொண்டேன்
அழகுப் பெட்டகம், பெண் தெய்வம்
இதயராணி காதல் இளவரசி தன் தலைவனுடன்
சோலைவிட்டு நீங்கினாள்
அந்தக் காதல் பொற்சிலையைக்
கவிதையிலே வடித்தேன்.
காதல் காதல் காதல் காதற்போயின்
சாதல் சாதல் சாதல் என்ற
மகாகவியின் வரிகளை படித்தேன்.
-விஷ்ணுதாசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.