புதிய போதை கொள்ளுங்கள்...!

சோமபானம் வழங்கும் சுதந்தர சுகம்
வேண்டின் கிட்டாது!
ஈன்றாளின் இன்ப மடி
இயற்கை அன்னையும் உன்னைச் சுமக்காது
புதைத்திடுவாள் பாரம் குறைந்ததென்று...!
பாதை மாற்றிடும் போதை இதுமட்டுமல்ல
மாதமிழக்கு ஈடில்லை காண் என்று
முழங்கிய தேசத்தை
மங்கை ஒருத்தி தரும் சுகமே பெரிதென்று
உயர்த்தினோம் உலக அரங்கில்
எய்ட்ஸ் நோயில் இரண்டாம் இடத்திற்கு...!
பாதை மாற்றிடும் போதை இது மட்டுமல்ல
மெய் வருத்தம் தனக்கில்லாது கண்துஞ்சி
பொய்யான பொய்த் தொண்டர்களான
அரசியல்வாதிகள் பதவி மோகத்தால்
பரதேசிகளின் பிச்சைப் பாத்திரத்தையும்
பறித்துத் திருடுகிறார்கள்!
இருப்பவனிடன் இல்லாதவன் திருடினால்
அது திருட்டு
இல்லாதவனிடம் இருப்பவன் திருடினால்
அது அரசியல்
என்று புது அர்த்தம் புகட்டினாய்...!
பாதை மாற்றிடும் போதை இது மட்டுமல்ல
இந்தியாவின் வருங்காலத் தூண்களை
சுமந்த அன்னையர்கள்
சிக்குண்டனர் சின்னத்திரைக்குள்
வீதியில் விளையாடிய குழந்தை
விசிறியடிக்கப்பட்டாள் வாகனத்தால்!
தொடர்பற்றுப் போனது கணவன் - மனைவி உறவு
குடும்ப விளக்கு இருண்டு போனது
தொலைக் காட்சி மோகத்தால்...!
பாதை மாற்றிடும் போதை இது மட்டுமல்ல
சரியான பாதையை உருவாக்கப்
புத்தனோ! இயேசுவோ! காந்தியோ!
எவரும் தேவையில்லை...!
செதுக்கச் செதுக்கச் கல்லும் சிற்பமாகும்
என்பதை நினைவில் கொண்டு...
உங்களை நீங்களே செதுக்குங்கள்,
உங்களை நீங்களே புதுப்பியுங்கள்...!
பழுக்கக் காய்ச்சிய இரும்பைச்
சம்மட்டியால் அடித்து
விரும்பிய பொருளாக்குவது போல
உங்கள் வார்த்தைகளைச் சம்மட்டியால் அடித்து
உங்கள் செயல்களால் வளைத்து
உங்கள் கரங்களால் வடிவமைப்போமென்ற
புதிய போதை கொள்ளுங்கள்...!
புதிய உலகைப் படைத்திடுங்கள்...!!
- முனைவர் ம. தேவகி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.