காகிதங்கள்
கல்மீது தொடக்கித்தில் செதுக்கிப் பின்பு
கல்மாறி ஓலையிலே எழுதி வைத்தார்
பல்வேறு அனுபவத்தால் அறிவு பெற்றுப்
படிப்படியாய்க் கண்டுபிடித்தார் காகி தத்தை !
சொல்வதினைத் தெளிவாகப் புரிந்து கொள்ள
சொற்களினை எழுத்தாக அதில்ப தித்தே
எல்லோரும் தம்முடைய மனக்க ருத்தை
எல்லோர்க்கும் பகிர்ந்திட்டார் பிழையே யின்றி !
அச்சிற்குக் காகிதமே கால்கோ ளாகி
அருந்தமிழில் முதல்நூலாயாய் பைபிள் வந்தும்
மெச்சுகின்ற இந்தியாவின் மொழிக ளுக்குள்
மேன்மைதமிழ் உரைமுதலில் கண்ட தச்சு !
அச்சுவெல்லம் போலதமிழ் புதின மெல்லாம்
அழகான நூல்களாகப் பாரோர் காணக்
கச்சிதமாய்த் திருக்குறள்தாம் மொழிகள் மாறிக்
கருத்தாலே வென்றதுவே உலகோர் நெஞ்சை !
அன்றாட வாழ்க்கையிலோர் அங்க மாக
அனைத்திற்கும் துணையாக நின்ற தின்று
முன்னோர்கள் கருத்தெல்லாம் நூல்க ளாக்கி
முன்னேற ஏணியாக முன்னே நின்று
பன்னூறு விஞ்ஞான கண்டு பிடிப்பை
பார்கடந்து விண்கோளில் காலை வைக்க
நன்முறையில் உதவியது காகி தங்கள்
நாமதனை ஆக்கவழி பயனாய்ச் செய்வோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.