வேறென்ன சொல்லனும்?
காதல் மதமதப்பில்
உன் நினைவுகளை ஊன்றிக்கொண்டு
சாலைகளில் நடக்கிறேன்.
ஊன்ற வந்த நீயே சாலைகளில்
பள்ளங்களை நட்டதோடு
விழவைத்து விழவைத்து
முத்தம் பெற்று விடுகிறாய்.
விழுந்த காயங்களிலும்
உனக்கான வாசகங்களை
வைத்திருப்பதால்தான்- நான்
தீராமல் மிஞ்சியிருக்கிறேன்.
என்னைச் சுடராக்கிக்கொண்டு
உருகும் என் கவிதைகள்- நான்
பேசாதவற்றை உன்னிடம் பேசும்.
நிறை காதலால்
நான் வடிக்காத கண்ணீரை அவை வடிக்கும்,
உன் மௌனம் என்னைத் திரவமாக்கும்- உன்
பெருமூச்சு என்னை ஆவியாய்க் கசியவிடும்.
என் மரண விநாடி -உன்
மடிதேடி முடியும் நான்
விட்ட இடமும்- உன்
பார்வைக்காய் பசித்திருக்கும்
வேறென்ன சொல்லனும் உனக்கு?
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.