எதிர்காலக் கனவு

கனவுகளில் நிறைந்திருக்கும் ஆசை கோடி
கண்ணுக்குள் மட்டுமேதான் கனித்த ஆசை
மனதுக்குள் எத்தனையோ இலட்சி யங்கள்
வந்துவந்து போகிறதே என்ன விந்தை
இனம்புரியா பருவத்தில் வெல்ல யாரோ
ஈன்றெடுத்த நினைவுகளும் இங்கே வீணோ
தனக்கான வாழ்க்கையுமே கனவாய் மாற
சாதிக்க மனத்துளேனோ கோடி ஆசை.
காண்கின்ற கனவுகளோ வாழ்ந்து பார்க்க
கானலாகி நிற்கின்ற விந்தை பூமி
கண்ணான எதிர்காலம் சிறந்து வாழ
கையிலென்ன யிருக்கிறது வாழ்ந்து பார்க்க
விண்ணாளும் திடமான உறுதி நெஞ்சில்
வென்றிடுவோம் உலகுயர்த்தி மேன்மை கண்டு
மண்ணாளும் மக்களிடை ஒற்று மையை
வாழ்வினிலே மகிழ்ந்துகாண செய்தல் நன்றே
.
சாதிமதப் பிரிவினைகள் தகர்த்து தேசம்
சமத்துவத்தில் உழன்றிடவே கனவும் உண்டு
பாதியாளாய் மனிதவாழ்வில் கலங்கிச் சுற்ற
பகுத்தறிவில் பிந்தங்கிப் பாலு ணர்வில்
நாதியற்று நடுத்தெருவில் புணர்தல் ஏனோ
நல்லகுல பிறப்பினிலே வந்த மக்கள்
சோதனைகள் வேண்டுவதோ பெண்கள் வாழ
சுதந்திரந்தான் பெண்களுக்கும் எங்கே என்போம்.
கள்ளிக்கா டுகளினூடே தொலைத்த கல்வி
காமராசர் கனவுபோல தழைக்கச் செய்வோம்
சுள்ளிகளை பொறுக்கிவந்த பெண்டீர்க் கெல்லாம்
தொகுத்தலித்த நாகரீக சீர்கேட் டையும்
தள்ளிவிடா எண்ணத்தால் சரிசெய் வோமே
தகர்விலாத நாடுகாண உழைக்க வேண்டும்
எள்ளியாட நகைப்புகளும் இனியும் வேண்டாம்
ஏற்றங்கள் காண்பதுதான் கனவின் ஆசை.
வல்லரசு வேண்டுவதே நாட்டின் கொள்கை
வற்றாத ஏரிகுளம் மனைகள் ஆச்சே
எல்லையற்ற பேராசை அழிவில் தள்ள
எங்குபோகும் சந்ததியும் மண்ணை விட்டு
தொல்லையில்லா வாழ்விற்கே மரங்கள் நட்டு
தொலைத்துவிட்ட நீர்தேக்கம் புதுமை செய்வோம்
கொல்லையாசை மனத்திலுண்டு கனவு போல
கூடிசெய்தால் நன்மையுண்டு நமக்கு நாமே
பகுத்தறிவு பெரியாரின் கொள்கை யெல்லாம்
பஞ்சாக காற்றிலோட சருகே மிச்சம்
தகுந்தகல்வி இலவசமாய் யாக்க வல்ல
தன்னாட்சி இனிவேண்டும் தரணி யாள
வெகுண்டெழுக இளைஞர்காள் வெற்றி காண்போம்
வெகுண்டகண்கள் புரட்சியென்றே பறைகள் சாற்ற
மகுடியூதும் அரசியலை தள்ளி வைப்போம்
மகத்துவத்தை நமக்காக நாமே செய்வோம்.
- கவிஞர் கு. நா. கவின்முருகு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.