அம்மா
அன்பின் அட்சயபாத்திரம்
ஆசைகளைக் கொன்று
இலக்கணப் பெண்ணாய்
ஈ எறும்பு என்னைத் தீண்டாமல்
உறக்கம் இழந்து
உன் உதிரத்தை உணவாக்கி
உண்டிசுருங்கி
ஊன் உருக்கி
எலும்பெல்லாம் நொந்து
ஏகாந்தநினைவலைகளோடு
ஐயிரு மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
ஒன்பது மாதமும் தொட்டு ரசித்து - என்
ஒய்யாரக்குரல் கேட்கும் பொழுதினிலே
வலியெல்லாம் கடந்து
கடைவிழியோரம் ஈரம் கசிய
கொஞ்சும் மழலையில் “அம்மா” என்றழைக்க
நீ எத்தனை இழந்தாய்
உன் இழப்பின் வரவாக
என்னை உச்சிமுகர்ந்து
உன் சுவாசத்தின் கடனாய்
எனக்குள் உன் சுவாசம்
என் வாழ் நாள் முழுவதும் பிரவேசிக்க - உன்
வாழ்வின் இறுதி வரை எனக்காகத்
தன்னையே உருக்குலைத்துக் கொள்ளும்
உன்னதப் பிறவி.
- முனைவர் பி. மீனாட்சி, சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.