ஒரு தாய்க் குதிரை!
கதவுகளின் சந்துகளில்
ஒளிந்து கொண்டு
பளிச்சிடும் பால் பற்களைக் காட்டியும்
சிரிப்பினில் கனியும் அந்தக் கன்னங்களும்
ரத்தினங்களின் ஒளியைக் கரைத்த
கருமை விழிகளும்
புலம்பும் மெல்லிசைக் கொத்துகளும்
பொழுது கரைந்தாலும் நிலைக்கதவினைத்
தாண்டிச் செல்லக் கால்கள் மறுத்து
ஓடிச்சென்று கரங்களில் அள்ளிக்
கொடுக்கும் முத்தத்திற்கு ஏங்கிய
அந்தக் கொடும் நொடியை என்னவென்பேன்?
காலைப் பொழுதில்
கால்கள் இரண்டிலும்
சக்கரங்களை கட்டிக் கொண்டு
வணிக வீதியில் பந்தயக் குதிரையாய்
வேலைக்கு ஓடும்
ஒரு குழந்தைக்குத் தாய்!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.