காட்டுக்கு அனுப்பி வைப்போம்!
சிற்றுயிர்க்கு உதவிய
பாரியையும் பேகனையும்
பாராட்டிப் பேசுகின்றோம்
வள்ளுவர் சொன்னதையும்
வள்ளலாரின் நேயத்தையும்
வாயாரப் புகழுகின்றோம்
ஆனால், அதைப்
பின்பற்ற வேண்டாமா?
ஈரமனம் கொண்டிருந்த நம்
முன்னோர்கள் வாழ்வு சொல்லும்
மனிதநேயம் இருந்தால் தான்
வாழ்வதிலும் நியாயம் உண்டென
அன்று சொன்னதெல்லாம்
இன்று காற்றில் பறக்க விட்டோம்!
நேசித்த உயிர் இறப்பென்றால்
தாங்க முடியா இழப்புதான்
இறந்த தன் மனைவியையே
பத்து மைல் தூக்கிச் சுமக்கும்
நிலையிங்கு வந்துவிட்டதே...
மனிதம் செத்து விட்டதா?
சாதியும் சமயமும் தான்
உதவிடத் தடையென்றால்
இரண்டையும் தூக்கியெறிவோம்!
ஈரமனம் இல்லாமல்,
இதயமே இல்லாமல்
மிருகம் போல்
இருப்பவனையெல்லாம்
காட்டுக்கு அனுப்பி வைப்போம்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.