தமிழ் காக்க...!

முன்னோர்தம் பழம்பெருமை பேசிப் பேசி
மூத்தகுடி முதல்மொழியாய் தோன்றிற் றென்று
பின்வந்த மொழிகளெலாம் வளர்த்து விட்டோம்.
பேசுமொழி தமிழ்காக்க மறந்து நின்றோம்.
எண்ணென்ன எழுத்தென்ன இலக்க ணங்கள்
எல்லாந்தாம் வகுத்திருந்தோம் என்ன செய்ய!
இன்றிங்கே அழிந்துவரும் மொழிக ளுக்குள்
எட்டாவ திடம்பிடித்தோம் பெருமை தானா?
தமிழ்காக்க தகுந்தவழி யோசித் தீரா!
தமிங்கிலங்கள் தொலைக்காட்சி வழியே எச்சில்
உமிழ்வதுபோல் நாளுந்தான் உமிழ்கின் றாரே!
உருப்படியாய்த் தமிழ்ப்பேச்சைக் கேட்பதெங்கே?
தமிழ்படித்தோர் வேலையின்றித் தெருவில் நிற்கும்
தன்னிலையால் தமிழ்படிக்க மறந்திட் டாரே!
தமிழாளும் மாநிலத்தில் வாதஞ் செய்ய
தமிழ்மறுக்கப் படுகிறதே நீதி நன்றோ?
தமிழுக்குள் வடசொற்கள் கலந்து வந்தால்
தமிழ்வாழ்வ தெங்கேநம் தமிழர் கூட
தமிழ்மறந்து வாழ்வதனால் மெல்லத் தேய்ந்து
தமிழ்சாகும் என்றசொல்லும் மெய்யாய்ப் போமோ?
தமிழுக்கும் அமுதென்று பெயரைச் சூட்டி
தமிழ்வாழ வழிசெய்த செயல்கள் வீணோ?
தமிழென்று முழங்கமட்டும் தமிழ்வா ழாது!
தமிழ்காக்க தகுந்தவழி அரசே செய்க!
நல்லதமிழ்ப் பெயர்சூடிக் கொள்க! நாளும்
நல்லதமிழ் நாப்பேசப் பழகிக் கொள்க.
வெல்லமல்ல வேற்றுமொழி, வேம்பு மல்ல.
வெற்றிகொள்ள ஒருமொழியை அழித்தால் போதும்,
மெல்லமெல்ல தமிழினமே அழிந்து போகும்
மேன்மைகொண்ட தமிழர்காள் அழிய லாமோ,
நல்லதொரு சூளுரைப்போம் தமிழைக் காக்க,
நாளுமிதை நாட்டிலிதைப் பரவச் செய்வோம்!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.