பெண் போற்றுவோம்!
பெண்மகவு கருத்தரிப்பின் நேரும் பெண்சிசு
வதைக் கொடுமைகள் மாள வேண்டும்
ஆண்மகவு உயர்வெனப் போற்றும் சீர்கெட்டஇவ்
ஆணாதிக்கம் முற்றும் மாள வேண்டும்
மழலை மொழிபேசிக் கொஞ்சி விளையாடிடும்
மழலைகள் வளர்ப்பினில் காணும் பேதங்கள்
முற்றும் சமுதாயத்தில் ஒழிந்திட வேண்டும்!
ஆண்மகவு உயர்வென்றும் பெண்மகவு இழிவென்றும்
பேதங்காட்டி வளர்க்கும் முறை அகல வேண்டும்
பெண்மகவு ஆண்மகவு சரிநிகரென கூறும்நல்
சமுதாயம் இங்கே வளர்ந்திட வேண்டும்
ஆணுக்குப் பெண்மகவு சற்றும் இளைப்பில்லை
பெண்ணும் ஆணும் உறுப்பினில் பேதமேயன்றி
உடல்திறனில் சிந்தனையில் யாதொரு பேதமுமில்லை!
பெண்ணுரிமை யெதுவென வீதிகளில் வாதம்செய்யும்
இன்றைய நிலைமாறி பெண்ணுரிமைச் சமூகத்தில்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருளீட்டல் வரையில்
வழங்கும் உரிமையே அனைத்திற்கும் முதலான
பெண்ணுரிமைகளுள் முதன்மையென உணர்ந்திட வேண்டும்
பெண்ணடிமைச் சமுதாயம் இத்திருநாட்டில் எங்கும்
இல்லையென கூறுமந்த பொன்னாள் இத்திரு
நாட்டிற்குக் கிடைத்த உண்மைச் சுதந்திரநாள்!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.