புதிது புதிதாய்...!
அடிக்கடி நிகழுகிறது எங்களூரில்
கட்டிக்கொடுத்த பெண்ணை
பிணமாகத் தூக்கி வருவது.
பிணமாக்கப்பட்டதான கோபத்தில்
பலர் பொங்குவதும்
பிறகு தன் வேலையைப் பார்ப்பதும்
ஒரே மாதிரி நிகழுகிறது.
‘சித்தப்பன் மகளைக் கட்டினவன்
கொன்று தொங்க விட்டதைச் சொல்லி
தூரந் தொலவட்டு வேணாம்’ என
என் திருமண விஷயத்தில்
பிடிவாதமாக இருந்தார் அப்பா.
ஆனாலும்...
கொன்று தொங்கவிட்டவர்கள்
எரித்தவர்கள்
நடுவீதியில் குத்தியவர்கள் என
அத்தனை பேருக்குமே...
இளம் மனைவிகள்
கிடைத்துவிடுகிறார்கள்
சொத்து சுகத்தோடு...
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.