ருசியைத் தேடி...!
வாரத்தில் ஒரு நாளேனும்
வீட்டுச் சமையலைத் தவிர்க்கிறோம்
விலைக்கு உணவை வாங்கியே
விரும்பி நாமும் சாப்பிடுகிறோம் !
பலமுறை பயன்படுத்திய எண்ணெயும்
பாதிப்பு தரும் வேதிப்பொருள்களுமாகப்
பல கலப்புகள் செய்திருந்தாலும்
பளபளப்பில் மகிழ்ந்து போகிறோம் !
விதவிதமான சுவைகளைத் தேடுகிறோம்
வீட்டு உணவை ஒதுக்கி ஓடுகிறோம்
விலை அதிகம் கொடுத்துச் சாப்பிடுகிறோம்
விடுதி உணவின் ருசியே அதிகமென்கிறோம் !
உடல் வலி, வயிற்று வலி என எது வந்தாலும்
உடலுக்குச் சேரவில்லை என்கிறோம்
உடல் நலத்தை இழக்கிறோம்
உடல் நலத்துக்கும் சேர்த்துச் செலவழிக்கிறோம் !
உடல் வலிமைக்கும், வயிற்றுப் பசிக்கும்
உணவைத் தேடிய நாம்
உணவு வாசனைக்கும், வாய் ருசிக்கும்
உணர்வு அடிமையாகித் தவிக்கிறோம் !
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.