தீது கண்டால்

ரௌத்திரம் கொள்வாயா தீது கண்டு
ரணங்களாகும் நினைவுகளும் தீந்து போக!
பௌத்தத்திலும் அடங்காத மனித மாக்கள்
பாவங்கள் செய்தலுமே நியாயம் என்பர்
சத்தத்தில் செத்துக்கி டக்கும் நாமும்
சாக்கடையாய்க் குற்றங்கள் செய்தல் நன்றோ
ரத்தத்தில் மிதக்குதிங்கே பிணங்கள் நாளும்
இனமதங்கள் என்பாரே சாதிச் சொல்லி
அவமானம் எல்லாமே விற்ற பின்னே
யாவுளவோ காத்திடவே நம்மை நாமே
தவக்கோலம் பூணுதலோ அமைதி யென்று
சாக்கடையில் சரிந்துவீழ்ந்து வாழ்வும் உண்டோ
அவலங்கள் நிகழுமிந்த அவணி எங்கும்
ஆரவார மோங்குதிங்கேச் சாதிச் சண்டை
சவங்களாகி ரத்தத்தில் மிதக்கு திங்கே
சடலங்கள் மனிதங்கள் சகித மின்றி
யார்வருவார் எழுப்பிவிட இவர்க ளையே
ஆதவனாய் புவிதோன்றும் மனிதன் யாரோ
பார்போற்ற வாழ்வாகி வாழ்த லென்றோ
பைம்பொழிலாய் மலரத்தான் இனிமை யன்றோ
தார்மீக அன்புகொண்டு நலன்கள் பேணி
சாதிக்க வேண்டுவதே மனித நோக்கம்
வேர்குடிக்க ரத்தங்கள் இனியும் வேண்டாம்
மேலோங்கும் புரட்சியுமே நம்மை ஏத்த.
எழுந்திடுவாய் தீதுகண்டு வெகுண்டு மண்ணில்
ஏற்றங்க ளெல்லாமே மாற்றத் தாலே
தொழுதிடுவாய் நல்லவைகள் நடக்கக் கண்டு
தோழமையைப் பற்றிடுவாய் ஒன்று பட்டு
மழுங்கித்தான் கிடக்கிறது மனித மூளை
மாற்றத்தை யார்தருவார் செழிக்க நாளும்
கழுத்துமேலே கத்திபோலே கூர்மை புத்தி
காலனையே அழைக்குதிங்கே யென்ன சொல்ல.
சாடிவிட்ட சமுதாயச் சீர்கேட் டாலே
தாழ்ந்துவிட்ட மனிதகுல மென்ன செய்யும்
தாடிவைத்த பழுத்தபழ மில்லை யிங்கு
சாத்திரத்தின் ஓலங்கள் செவிக்குச் சூடு
நாடிழந்து போகாமல் உயிர்கள் போக
நையாண்டி யானதுவே தேச மிங்கே
கூடிவாழக் கோடிநன்மை யறியார் போலும்
கொலைக்களமாய் போனதுவே வாழும் தேசம்.
- கவிஞர். கு. நா. கவின்முருகு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.