இந்நிலை மாறுவது எந்நாளோ?
அடுக்கு மாடி கட்டிடமில்லை
அழகாய் வண்ணம் அடிக்கவில்லை
உட்கார வெறும் தரை தான்
மின்சாரம் கூட அங்குயில்லை
நவீன வசதி ஏதுமில்லை
எங்க ஊரு அரசுப் பள்ளியில்தான்.
ஓட்டையில்லாச் சட்டையில்லை
ஒழுங்காய்த் தலை வாரவில்லை
காலுக்குச் செருப்புமில்லை
பார்த்தவுடன் சொல்லிடலாம்
பரம ஏழைப் பிள்ளைகள்
படிக்கும் பள்ளி நிலையிது தான்.
கட்டமைப்பு நிறைவாயில்லை
கற்கும் பிள்ளையும் ஏழை தான்
அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள்
அவர் மொழி கேட்கும் பிள்ளைகள்
ஆகையினால் அங்கு இருந்தது
கல்வி மட்டும் பணக்காரன் போல்.
ஆங்கிலப் பள்ளிகள் வரும் வரை
பழுத்த மரம் நாடும் பறவையாய்
மாணவர்கள் நிறைந்திருந்தார்
ஆங்கில மோகத்தால் இன்று
அரசுப் பள்ளிகள் எல்லாம்
வசதிகள் இருந்தும் பிள்ளைகளில்லாமல்...!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.