ஆசை
உன் சுவாசக் கூட்டுக்குள் - என்
சுவாசம் சுமந்தாய்
உன் உயிர்க் கூட்டுக்குள் - என்
உரு தாங்கினாய் - உன்
உதிரத்தையும் உணா்வுகளையும் - நீ
சொல்லாமலே எனக்குள் பதித்தாய்
என்னைச் சூள் கொண்ட நாள் முதல்
ஊன் உறக்கமின்றி
தொட்டு ரசித்தாய் - என்
முகம் பார்த்து உன் பசி மறந்தாய்
எனக்கான பெயரையும்
எனக்கான அடையாளத்தையும் - உன்
கனவிலே நீ கவி புனைந்தாய்
ஏடு தூக்காவிட்டாலும்
என்னை எட்டு பேருக்கு
கற்பிக்கும் குருவாக்கினாய்
உன் வியா்வையின்
விலை கொடுத்து
முந்தானை நுனியில்
நீ சுமந்து வந்த பண்டம்
அமிர்தத்தைக் காட்டிலும்
அளாதியான சுவை தருமே
மாற்றாடை இல்லாமல்
நீ கழித்த நாட்களில்
வானவில்லாய் நான் வலம்வர
கண்திருஷ்டி கழித்தாய்
வாசனை திரவியங்கள் பல புனைந்தாலும்
எனக்கு வாசம் தருவது - உன்
வியா்வை எத்தனை பேரின்பம்
இன்னுமோர் ஜென்மம்
வேண்டும் தாயே - என்
கருவில் நீ சூள் கொள்ள
காப்பு காய்ந்த உன் கைகைளை - என்
மகளாக நான் பிடிக்க
உறக்கம் தழுவா உன் விழிகள் - என்
மடிதனில் உறக்கம் தேட
பசி மறந்த உன் வயிற்றுக்கு - நான்
அறுசுவை அமுதூட்ட
வேண்டும் தாயே
இன்னுமோர் ஜென்மம்
- முனைவர் ப. மீனாட்சி, சிவகாசி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.