நாளை நமதே

சாதிக்க தூரங்க ளில்லை
சரித்திரங்கள் எழுதிடவு மில்லை
வாதிக்க மனிதர்கள் தானே
வந்திங்கு உரைப்பார்க ளேனோ
மோதிடுவர் சாதிகளைச் சொல்லி
மொத்தத்தில் தோல்விகளே எள்ளி
போதிக்க யார்வருவார் சொல்லு
புரட்சியாலே நாட்டினையே வெல்லு
எல்லோரும் தமிழ்மொழியை கற்றால்
இல்லத்தில் மகிழ்வாகும் இந்நாள்
கல்லார்க்கும் கல்வியினை தந்து
காலத்தே சிறந்திடவே செய்து
வல்லவனாய் நாளைதனை வெல்ல
நமதாகும் நாளையுமே இங்கு
சொல்லாது சாதனைகள் செய்வாய்
சொல்லொண்ணா சிறப்புகளை காண்பாய்
தடுத்திடுவாய் வன்புணர்வு நாட்டில்
சாட்டிடுவாய் காமுகரை தட்டி
கொடுத்திடுவாய் பாதுகாப்பெல் லோர்கும்
கொள்கையினை வகுத்திடுவாய் வாழ்வில்
எடுத்தியம்பு பாவையரின் உள்ளம்
இல்லத்தி லவர்பெருமை போற்று
கொடுமைகள் பாலினமாய் ஏற்று
கொல்கின்ற நிலைதன்னை மாற்று!
மரமழிக்கும் மனிதர்களைச் சாடு
மாமழையின் பெருமைகளைப் பேணு
தரமான விளைநிலத்தை விற்று
தணியங்கள் விதைப்பதுதான் எங்கு
வரப்பின்றி உழவுந்தா னேது
வற்றிவிட்ட வயிற்றுக்கு யாது
மறத்தமிழன் வாழத்தான் நாளை
மண்வேண்டும் உணவுக்கு நாளை!
வென்றிடுக நாட்டினையே! கொள்கை
வெற்றியினை தந்திடவே வேண்டும்
தின்றுவாழும் கூட்டமிங்கே உண்டு
தீயாகி எரித்திடுக நின்று
கொன்றுவிடு தீமைகளை நாட்டில்
கோனெனவே வாழ்ந்திடுக என்றும்
என்றென்றும் உனதாக்கு நாளை
ஏற்றங்கள் உனதாக்கும் வாழ்வில்!
- கவிஞர். கு. நா. கவின்முருகு, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.