சரித்திரம் படைப்பாய்!!
நாட்டுக்கும் பெண் பெயராம்
ஓடும் ஆற்றுக்கும் பெண் பெயராம்
காரணம் பெண்ணைப் போற்றுகிறார்களாம்
கொஞ்சமாவது இதில் உண்மை இருக்கிறதா?
வீட்டுக்குள் பெண்ணைப் பூட்டி வைத்தார்
கல்வியைக் காணாப் பொருளாக்கினார்
தீட்டென கோவிலுக்குள் செல்லாமல் தடுத்தார்
ஆணின் அடிமையாக்கினார் பெண்ணை அன்று.
எத்தனை நாள் இது தொடரும்
பொங்கியெழுந்தது மங்கையர் கூட்டம்
சங்காரமானது சதிகாரர் ஆட்டமென
பாட்டன் பாரதியின் வாக்கும் பலித்தது.
ஆலையிலும் பெண், கல்விச் சாலையிலும் பெண்,
மண்ணிலும் பெண், விண்ணிலும் பெண்,
ஆட்சியிலும் பெண், அதிகாரத்திலும் பெண்
இவள் இன்று எங்கும் இது உண்மையன்றோ?
ஆண்டவனின் படைப்பின் பிரதிநிதியான பெண்ணே
நீ இன்னும் படைக்க வேண்டும் பல சரித்திரம்
நீயின்றி எதுவும் நடக்காது பூமியில் என்பதை
உன் உறுதியான செயலால் வென்று காட்டு என்றும்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.