தீபத்தின் ஒளியில்
திக்கெட்டும் நிறைந்திருக்கும் இருளின் ஆட்சி
தீபத்தின் ஒளியாலே அழிவ தைப்போல்
தக்கதொரு உழைப்பிருந்தால் வாழ்வில் காணும்
தரித்திரமும் சொல்லாமல் ஓடிப் போகும் !
பக்கத்தில் நின்றுதிரி தூண்டி விட்டால்
படபடக்கும் சுடர்நின்று எரிவ தைப்போல்
துக்கத்தில் இருப்போர்க்குக் கையைத் தந்தால்
துயர்போகும் நிம்மதியில் மகிழ்வர் அன்றோ !
பொன்நகைகள் அணிந்திருந்தும் உதட்டில் பூக்கும்
புன்னகைதாம் முகத்திற்கே அழகூட் டல்போல்
மின்சார வண்ணமய விளக்கி னாலே
மினுமினுக்கும் அலங்காரம் செய்தி ருந்தும்
பண்டைமுதல் ஏற்றிவைக்கும் வெள்ளி தீப
படரொளியே இறையறையை மங்கல மாக்கி
எண்ணத்தில் மறைந்திருக்கும் கயமை இருளை
எரித்துநல்ல அகமாக்கி ஒளிரச் செய்யும் !
சேய்களன்று படித்துயரத் துணையாய் நின்று
செம்மையற வாழ்விற்கு வழியைக் காட்டித்
தாய்அன்பு கைகள்போல் அரவ ணைத்த
தண்ணொளியாம் தீபத்திற் கீடு முண்டோ !
வாய்மைக்குக் காட்டாகும் தீபந் தன்னை
வணங்கிபணி செய்தாலே ஒளிரும் வாழ்வு
தூய்மையினை மனத்திற்குள் நிறைக்கும் தீப
தூயவொளி போல்பிறர்க்கு ஒளியாய் வாழ்வோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.