பாரதி போல் வாழ்ந்திடுவோம் !
கரிசல் பூமியாம் எட்டயபுரத்தில்
பாட்டுக் கனலாய் பாரதி பிறந்தார்
நாட்டு விடுதலை சமூக விடுதலை
இரண்டையும் சமமாய்ச் சொன்னார் பாட்டில்
நாட்டு விடுதலைக்காய் நாளும் போராட்டம்
சமூக விடுதலைக்காய் சமத்துவ வாழ்க்கை
இரண்டும் கிடைத்திட இடைவிடாது உழைத்தார்.
சன்னியாசிக்கும் உண்டு சாதிப் பற்று
சாதியைத் துறந்த சம்சாரி பாரதி
மண்ணில் பிறந்த மனிதர் அனைவரும்
தன்னுடன் பிறந்த சகோதரர் என்றார்
பேதமின்றி வாழ்ந்தால் நாடும்
பெரிய வெற்றி பெறலாம் என்றார்.
ஆற்றையும் நாட்டையும் பெண்ணாய்க் கண்டார்
தன் வீட்டுப் பெண்ணை மட்டும் பூட்டியே வைத்தார்
ஊரைப் போலவே பாரதியும் வாழ்ந்தார்
சகோதரி நிவேதிதாவை சந்தித்த பின்னே
பெண் விடுதலையின் அருமையை உணர்ந்தார்
அன்று முதல் பெண்ணின் பெருமை போற்றினார்
பாரதியைப் போல நாமும் வாழ்ந்திடுவோம்
புதிய பாரதம் படைப்போம்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.