ஆடிவா மகளே!
ஆடிவா மகளே -
உன் சிவந்த பாதங்கள் “தைதை” யென
சந்தங்கள் இசைத்திட இந்தநிலம் ஏங்குது
ஆடிவா என் பொன்மணியே! கண்மணியே ஆடிவா
முத்துப்பல் இரண்டடுக்கும் உன் தாளத்துக்கு
மூச்சிறைக்க உன் கால்களில் தவமிருப்பதை நீ
அறியவில்லையா? கண்ணே! நீயதை அறியவில்லையா?
ஆடிவா என் மகளே -
நாட்டிய நூல் பல கற்றுத் துறைபோகிய ஆடலரசி
நங்கையோ நீ? யென காண்பவர் வியக்கும் வண்ணம்
விரல்களில் நாட்டிய முத்திரைகள் பதித்து ஆடிவா
ஆடிவா பொன் மகளே -
புகழ் தமிழிசை பாட்டுக்கு நல்ல
புதுக்கவிதை நாட்டியம் ஆடிவா பொண்ணே
ஆடிவா மகளே! பொற் சலங்கைகள்
சந்தமெழுப்பியே நீ ஆடிவா மகளே
ஆடிவா என் பொன் மகளே!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.