இறை வார்த்தை!
அகிலத்தை அழகாய்ப் படைத்தவனே
என்னை அற்புதமாய்க் காத்தவனே
எங்கும் நிறைந்திருக்கும் இறையருளே
பாவ மனிதனாய் பாரில் நான் பிறந்து
பண்ணுகிறேன் பலபாவம் அனுதினமும்
இறைவா உன் வார்த்தைகளை மறந்து.
உலகப்பாரமெனை அழுத்துகிற போது
கண்கலங்கித் தவிக்கின்றேன் கர்த்தனை மறந்து
நான் மறந்த போதும் நீரென்னை மறக்கவில்லை
சக்தியிழந்தவனுக்கு உணவு கொடுப்பது போல்
அடியேனுக்கும் சக்தி அளிக்கிறது
ஆற்றல் தரும் உன் இறை வார்த்தை.
உம் திருமறை தரும் வார்த்தை
வழுவாது எனைக் காக்கும் கேடயம்
சத்திய வேதமது நித்தமும் வழிகாட்டும்
துன்பத்தில் அது எனைத் தேற்றும்
பாரத்தை இறக்கி வைக்க நாம்
வேதத்தை தினம் வாசிப்போம்.
இறை வார்த்தை சொன்னவரும்
மனுமகனாய்ப் பிறந்து விட்டார்
மாட்டுத் தொழுவம் ஆனாலும்
ஏழைகளை மகிழ்விக்கின்றார்
இறை இயேசு மொழி கேட்டு
இன்பமாய் கொண்டாடுவோம் கிறிஸ்துமஸ் நன்னாளை!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.