அம்மாவே... மனம் நிறையும்!

அம்மாவே - உன்
இழப்பின் நிலையில்
கண்ணீரில் கரைகிறாய் - உன்
நினைவு வகையில்
இதயங்களை நிறைகிறாய்...
கலைத்துறையில் - உன்
அறிமுகம் துவங்கியபோது - உன்
'ஆணைக்கிணங்க' தமிழகம்
ஆளுமை கொண்டிருப்பதை
அறிந்திருக்க மாட்டாய் - உன்
வளர்ச்சியின் பாதையில்
வீழ்ச்சிகள் ஒதுங்கிய
புகழின் உச்சியை அடைந்தாய்...
வழியே வந்த களத்தில் - உன்
கையிருப்பு ஆயுதமெல்லாம்
குன்றா நம்பிக்கை மட்டுமே - உன்
முயற்சிகளின் மேல் வீழ்ந்த
அவமானத் தாக்குதல் சாய்த்து
இலட்சியப் பதவியில் அமர்ந்தாய்...
உயரமேறும்போதெல்லாம் - உன்
தோல்வி தடைகளுக்கு வைராக்கியம்தானே
தலை நிமிர்வு தந்தது - உன்
சுயத்தில் படிந்த அந்த கறுப்பு நிகழ்வு
வெளிச்சம் பெற்ற ஜனத்திரளில்
கீழ் இறக்கிவிடப்பட்ட வாகனம் - உன்
பூதவுடல் மரியாதை சுமக்கும்படி
வாழ்ந்து காட்டிவிட்டாய்...
கட்டுக்கோப்பாய் - உன்
தொண்டர்கள் மட்டுமா - உன்
முற்றுப்பெறாத ஞாபகம்
ஏக மனசுகளில் என்றென்றும்
கல்வெட்டுப் பதிப்பாய்...
காலத்தின் நகர்வில் - உன்
எதிர்பட்டவைகள் எல்லாம்
சோதனை, வேதனைகளின் இடர் - உன்
நேர்கொண்ட முன்னேற்றத்தில்
சேர்ந்து கொண்டவைகள்
சாதனையாய் சரித்திரமாய்...
தலைகுனியாத தீரச்செயல்கள் - உன்
தகுதியை உலகக் தரமுயர்த்த
'தங்க தாரகை' அடையாளம் - உன்
பெண்மை கிரீடத்தில்
வணக்கத்துக்குரியதாய்...
வாழ்கைப் பயணத்தில் - உன்
முன்பின்னும் குழிபறித்த கரங்கள் - உன்
மீட்சியைக் கண்டு வணங்கிய போது - உன்
ஆட்சி அதிகாரம் தவிர்த்து
தாய்மையோடு முகம்பூத்திருந்தாய்...
யாருமற்றதாய் - உன்
தனிமைத்தனத்தில் தமிழ்நாடே உள்ளதென
‘அம்மா' சொல் வருத்தமுட்ட, முட்ட
விம்பல்கள், அழுகை கடந்து
கடற்கரையோரம் புதைந்து
புதையாத நினைவாகிவிட்டாய்...
அம்மாவே - உன்
அமைதி புன்னகை
சந்தனப்பேழை திறந்து வந்து
காலமுள்ளவரை மனம் நிறையும்..!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.