சொந்தங்களுக்காகக் காத்திருக்கிறேன்!
மாவிலைத்தோரணங்களும்
வண்ணக்காகிதங்களும்
அலங்கரிக்காத
வீட்டு விழாக்களைச்
சொந்த பந்தங்கள் மட்டும்
அலங்கரிக்குமே...
அத்தை இலை போட
அம்மா சாதம் பரிமாற
அக்கா சாம்பார் ஊத்த
தங்கை கூட்டு வைக்க
மொத்தக் குடும்பமும்
ஒன்றாய் அமர்ந்து
உண்ணும் நேரம் சொர்க்கமே...
சிறுசிறு குழப்பங்களும்
சண்டைகளும் சமாதானங்களும்
வாரச்சந்தைக் கூடுவது போல்
எந்நேரமும் கூச்சலும் கும்மாளமுமாய்
நகரும் பொழுதுகள்
நமக்குத் தரும் குதூகலமே...
விழாக்கள் முடிந்த பின்
விடை பெற்றுச் செல்லும்
கொடுமையான நிமிடங்கள்
அடுத்துச் சொந்தங்கள்
கூடும் விழா எப்போது வரும்
என எதிர்பார்க்க வைக்குமே...
நெடுநாள் கழித்து
மீண்டும் சந்திக்கும்
அந்தச் சொந்தங்களுக்காகக்
காத்திருக்கிறேன்.
- ப. செல்வகுமார், கட்டுமாவடி, மணமேல்குடி வட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.