சூரியனை வணங்கிடுவோம்!
அகிலம் போற்றும் சூரியக் கதிர்களே
அனலாய் கொதித்த போதிலும் மின்னும்
கதிர்களை நீ விளைவிக்கின்றாய் - உன்
பொன்னொளிக் கரங்களால் மண்ணும் விண்ணும்
புதுப்புதுப் படைப்பிலக்கியக் களங்களாகப்
புதுப்புதுப் பரிணாமம் பெறுகின்றன! -ஒளிரும்
வீச்சரிவாளாய்ப் பூமியில் பதிந்து மண்ணை
வீரியம் பெறச்செய்கின்றாய் -குளிருங்
கடும்பனியை விலக்கி ஒளிச்சேர்க்கை செய்கிறாய்
கதிர்நெல் மணிகளாய் மீண்டும் இந்த
பூமியிலே பிறப்பைத் தவறாது எடுக்கிறாய்
மகசூல் செய் வித்தகனாய் விளங்கி உழுவார்
மனங்களை மகிழ்விக்கிறாய்! ஓயாதுழைத்து கிழக்கும்
மேற்கும் பெயர்ந்து புதுத்தெம்பைப் பெறுகிறாய்
மேற்கில் அமைதிக் காற்றுவீச ஆணையிடுகிறாய்
அதனாலன்றோ இந்தத் தென்றல் கன்னி
ஆவல் கொண்டு உன்னை மகிழ்விக்கிறாள்
சுடரொளிக் கொடுத்து இருளில் தவிக்கும்
எளியவர்க்கு நல் வாழ்வை அளிக்கிறாய்
எம்மை வாழவைக்கும் உன்னை வணங்கிடுவோம்!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.